தொண்டி பகுதியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
தொண்டி பகுதியில் மீன்கள் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
தொண்டி,
தமிழகம் முழுவதும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலத்தையொட்டி தொண்டி பகுதியில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தொண்டி மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, கண்கொள்ளான்பட்டினம், புதுப்பட்டினம், சோளியக்குடி, லாஞ்சியடி, நம்புதாளை, தொண்டி, புதுக்குடி, மகாசக்திபுரம், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், தாமோதரன் பட்டினம், நாரேந்தல், வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் தொண்டி மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. தொண்டி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களே விற்பனைக்கு வருகிறது. அந்த மீன்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மீன்களாகவே இருக்கும்.
இதனை வேறு வழியின்றி அதிக விலை கொடுத்தும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.400 முதல் ரூ.450 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் வெளியூர்களில் வசிக்க கூடியவர்கள் தங்களது குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் சிலர் வாங்கி செல்கின்றனர். தொண்டி மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை விலை கூடுதலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.