8, 13, 16-ந் தேதிகளில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்யலாம் அதிகாரி தகவல்

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்கள் வருகிற 8, 13, 16-ந்தேதிகளில் தேர்தல் செலவு தொடர்பான கணக்கினை தாக்கல் செய்யலாம் என தேர்தல் அதிகாரி மீனாட்சி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-06 21:30 GMT
கரூர், 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 63 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வது பற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்ட ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தலுக்காக தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஒரு குறிப்பிட்ட தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பத்திரிகை-தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் நேரடியாகவோ அல்லது தங்களின் முகவர்களின் மூலமாகவோ அல்லது இருவருமோ நாளை (புதன்கிழமை) மற்றும் வருகிற 13-ந்தேதி, 16-ந்தேதி ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தங்களின் தேர்தல் செலவினம் தொடர்பான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களுடன் தேர்தல் செலவின பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுயேச்சை வேட்பாளர்களும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இதர அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் செலவின கணக்கை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் செலவின கணக்கு சமர்பிக்கும்போது வேட்பாளர்களால் சரியான, முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை என்றாலோ, தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகளின்படி கணக்குகள் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ, வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்காமல் இருந்தாலோ, இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ள தொகைக்கு மேலாக செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலோ, 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு படியும், 1860-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம் 171-ஐ படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலால் உதவி ஆணையருமான மீனாட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்