காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரிக்குள் கார் பாய்ந்தது - டிரைவர் உயிர் தப்பினார்
காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரிக்குள் கார் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
காட்டுமன்னார்கோவில்,
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜன். வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் சவாரி ஏற்றிக்கொண்டு காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தார். அதில் வந்த பயணிகளை காட்டுமன்னார்கோவிலில் இறக்கி விட்டுவிட்டு, மீண்டும் தனது காரில் நாகராஜன் சென்னைக்கு திரும்பினார்.
அப்போது நேற்று அதிகாலை 5 மணி அளவில், லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்தார். கலியமலை என்கிற இடத்தில் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி வீராணம் ஏரிக்குள் பாய்ந்தது.
47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 46.10 அடியில் தண்ணீர் உள்ளது. ஆனால் கார் தண்ணீருக்குள் பாய்ந்த பகுதி கரையோரம் என்பதால், சுமார் 5 அடி ஆழத்திற்குள் கார் மூழ்கியது. இதையடுத்து அதில் இருந்து நாகராஜன் வெளியே, நீந்தி வந்துவிட்டார். இதன் மூலம் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் இதுகுறித்து புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கிரேன் மூலமாக தண்ணீருக்குள் மூழ்கிய காரை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.