சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலையை தொடங்க கோரிக்கை

சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-05-05 22:30 GMT

சிவகங்கை,

சி.ஐ.டி.யு மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் உமாநாத் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வீரையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணைத் தலைவர்கள் அழகர்சாமி, வாசுகி, முருகானந்தம், சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, விஜய்குமார், முருகேசன், கருப்புச்சாமி, மாவட்ட பொருளாளர் முருகன், அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் தெய்வ வீரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:– சிவகங்கை அருகே 900 ஏக்கர் பரப்பளவில் கிராபைட் கனிமம் வளம் மிக்க பகுதியாக உள்ளது. இது உலக அளவில் 2–ம் தரம் வாய்ந்ததாகும். மேலும் இந்த பகுதி கருப்புத்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கிராபைட் தொழிற்சாலையை தொடங்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சிவகங்கை அருகே ஸ்பைசஸ் பார்க் தொடங்குவதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை தற்போது பயனற்று கிடக்கிறது. எனவே அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்பட்ட வீடியோகான் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நல அலுவலகத்தில் நல வாரிய பலன்களை பெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக இதை சரி செய்ய வேண்டும். மேலும் சிவகங்கை அரசு மருத்துவமனை உள்பட சிவகங்கை நகரில் உள்ள சாலையோரங்களில் கடைகள் வைத்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நகராட்சி மூலம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்