ஓட்டுனர் உரிமம் பெற தனியார் திருமண மண்டபத்தில் குவிந்த இளைஞர்கள்; பயிற்சி பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பால் பரபரப்பு

ஓட்டுனர் உரிமம் பெற தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்கள் குவிந்தனர். அதற்கு பயிற்சி பள்ளி நிர்வாகிகளின் எதிர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-05 22:45 GMT
ஈரோடு,

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு 6-ந்தேதி வந்தால் ஓட்டுனர் உரிமம் வாங்கி கொடுக்கப்படும் என ஒரு இன்ஸ்டிடியூட் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டது.

அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த திருமண மண்டபத்தில் நேற்று ஒன்று திரண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த நிர்வாகிகள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இளைஞர்களிடம் விளக்கி கூறிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் டுட்டோரியல் பள்ளிக்கூட நிர்வாகிகள் அவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனைவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்