காற்று, தண்ணீரைப்போல தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர் பெரியார் கவிஞர் வைரமுத்து பேச்சு
காற்று, தண்ணீரைப் போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர் பெரியார் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
திருச்சி,
தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் வகையில், ஆராய்ச்சி கட்டுரைகளை ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அந்த வரிசையில், 24-வது ஆளுமையாக பெரியார் குறித்த கட்டுரையை நேற்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அரங்கேற்றினார்.
தமிழாற்றுப்படையின் நிறைவுக் கட்டுரையான இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பேராசிரியர் அருணன் வாழ்த்துரை வழங்கினார். வெற்றித் தமிழர் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவர் பி.வீ.பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஜெயக்கண் நன்றி கூறினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்துகொள்வது?. அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?. வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?.
பெரியார் எனில் ‘பிராமண எதிர்ப்பு’ மற்றும் ‘கடவுள் மறுப்பு’ என்று கருதுகிறவர்கள், அவரைக் கண்ணைமூடிக் கண்டவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. யானை அசைவம் என்று அதன் தோற்றம்கண்டு முடிவு கட்டமுடியுமா?. மனிதநேசம்தான் பெரியாரின் இலக்கு; பகுத்தறிவுதான் அவர் பாதை; சுயமரியாதைதான் வாகனம்; சமத்துவம்தான் அவர் சக்கரத்தின் அச்சு.
5-1-1953 அன்று பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதியை எழுத்து மாறாமல் பதிவு செய்கிறேன். “பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகமும், நானும் சொல்லுவதெல்லாம், விரும்புவதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பதுதான்”. பெரியாரின் இந்த வாக்குமூலத்தில் ‘நாங்களும் கொஞ்சம்’ என்ற சொல்லாட்சி வலி மிக்கது; வாஞ்சை மிக்கது மற்றும் அவரது மனித நேசத்துக்கு மாறாத சாட்சி சொல்வது.
மனிதக் கூட்டத்தை விஞ்ஞானம் பிரிப்பதற்கும், மதம் பிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. விஞ்ஞானம் திராவிட இனம், ஆரிய இனம், மங்கோலிய இனம், காக்கேசிய இனம் என்று கபால அடிப்படையில் மனிதர்களை நான்காகப் பிரிக்கிறது. ஆனால் மதமோ பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று கடவுள் அடிப்படையில் நான்காகப் பிரிக்கிறது.
இந்துமதம் பெரியாருக்கென்ன எதிரியா?. கடவுளென்ன வைரியா?. உழைக்கும் மனிதன் மதத்தின் பெயரால் ‘சூத்திரன்’ என்றும், ‘அடிமை’ என்றும் இழிவுசெய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது - இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத்துயரம்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கதற வைத்தது பெரியாரை.
துணைவியார் நாகம்மை மரணத்திற்குப் பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை கவிதை போன்றது. “பெண்கள் சுதந்திர விசயமாகவும், பெண்கள் பெருமை விசயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை. ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா?. ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா?. நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன். நாகம்மாள் முடிவு நமக்கு நன்மை தருவதாகுக”.
துணைவியாரின் மரணத்தைப் பெரியாரைப்போல் இப்படிக் கொண்டாடிய தலைவர் வேறு யாருமில்லை. தமிழர்களின் மனித அதிசயம் பெரியார். காற்றைப்போல், தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர். 90 வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்த தமிழ்ப் புலத்தின் அறிஞர் ஒருவர் தன் மரணத்தின் முன்நிமிடத்தில் இப்படிச் சொல்லிப் போனார்: “இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலைபெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்; இன்னொருவர் பெரியார்”.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில், கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிய கட்டுரை ‘கருஞ்சூரியன்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. முதல் பிரதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட பேராசிரியர் அருணன் பெற்றுக்கொண்டார். முன்னதாக பெரியார் உருவப் படத்திற்கு கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் அருணன் உள்பட முக்கியப் பிரமுகர்களும், கல்வியாளர்களும் மலரஞ்சலி செலுத்தினார்கள். விழாவில் வெற்றித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்களும், தமிழறிஞர்களும், கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.