வேலூரில் எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - ஏ.சி.சண்முகம் பேட்டி
‘வேலூரில் எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்‘ என்று புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
மதுரை திருப்பரங்குன்றத்தில் புதிய நீதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் திண்டுக்கல் வழியாக காரில் வந்தார். அவருக்கு திண்டுக்கல்-மதுரை சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அ.தி.மு.க. மற்றும் புதிய நீதி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, என்னுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாள் முழுவதும் பிரசாரம் செய்தனர். எனவே தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
இந்த நிலையில் தான் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான வீட்டில் நடந்த சோதனையில் ரூ.13 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலூரில் நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சூலூரில் தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தமிழகத்தில் இன்னும் 25 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசியுள்ளார்.
அவர் கூறியது போல் ஆட்சியும் மாறாது. காட்சியும் மாறாது. அவருடைய கனவு தான் மாறும். கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலின் போது வேலூரில் உள்ள 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றது. எனவே வேலூர் தொகுதி அ.தி.மு.க. வின் கோட்டை. அங்கு எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். இது தெரியாமல் துரைமுருகன் கற்பனையில் ஏதேதோ பேசி வருகிறார். வேலூரில் அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.