ஆண்டிப்பட்டி பகுதியில், கிணறுகள் வறண்டதால் கருகிய பயிர்கள் - விவசாயிகள் பாதிப்பு
ஆண்டிப்பட்டி பகுதியில் கிணறுகள் வறண்டதால் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம், திருமலாபுரம், அரப்படித்தேவன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்மாய், கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது. வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டால் இங்குள்ள கிணறுகளில் தண்ணீர் நிரம்பி காணப்படும். வைகை ஆறு வறண்டு கிடந்தால் கிணறுகளில் தண்ணீர் வறண்டு விடும். அதுபோல், இங்குள்ள கண்மாய்களில் தண்ணீர் இருக்கும் வரை விவசாயம் செழிப்பாக நடக்கும்.
இப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே வறண்டு விட்டன. வைகை ஆற்றில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இருப்பினும் கிணற்றில் இருந்த தண்ணீரை கொண்டு பருத்தி, மிளகாய், வெண்டை, தக்காளி போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
மிளகாய், வெண்டைக்காய் விளைச்சல் அடைந்து காய்கள் பறிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்தது. பல கிணறுகள் வறண்டு விட்டன. ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன. இதனால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதன் விளைவாக காய்கள் பறிக்கப்பட்டு வந்த நிலையில், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி பயிர்கள் கருகி விட்டன. விளைச்சல் அடையும் நிலையில் இருந்த பருத்தி செடிகளும் கருகின. தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாத நிலையில், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருகி பயிர்களை கால்நடைகளுக்கான மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உழுது, விதை தூவி, களை பறித்து, உரமிட்டு பராமரித்து வந்த நிலையில், மகசூல் கிடைக்காமல் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.