பாம்பனில் புதிய ரெயில்பால பணிகள் விரைவில் தொடங்கும் ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி

பாம்பனில் புதிய ரெயில்பால பணிகள் விரைவில் தொடங்கும் என்று பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தெரிவித்தார்.

Update: 2019-05-04 23:15 GMT

ராமேசுவரம்,

தெற்கு ரெயில்வேயின் புதியபொதுமேலாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல்ஜெயின் ராமேசுவரம் ரெயில்வே நிலையம் மற்றும் பாம்பன் ரெயில் பாலம்,புதிய ரெயில்பாலம் அமையவுள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்ய நேற்று சிறப்பு ரெயில் மூலம் வருகை தந்தார். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு கட்டிடம் உள்ளிட்ட பல இடங் களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து மோட்டார் டிராலி மூலம் பாம்பன் ரெயில் பாலம் வந்த அவர் ரெயில் பாலம் மற்றும் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலம் மற்றும் புதிய ரெயில் பாலம் கட்டப்படவுள்ள கடல் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் லெனின், கூடுதல் கோட்ட மேலாளர் ஷா உள்ளிட்டட பலர் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பின்பு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:–பாம்பன் ரெயில் பாலம் அருகிலேயே புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய ரெயில் பாலம் கட்டுவதற்காக சர்வே பணி நடைபெற்று வருகிறது. புதிய ரெயில்பாலம் கட்டுவதால் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. புதிய பாலம் சுற்றுச்சூழல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று தான் கட்டப்படும்.

பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ராமேசுவரம்–தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில் பாதை அமைக்க சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது. சர்வே பணிகள் முடிந்தபின் விரைவில் தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதை பணிகள் தொடங்கப்படும். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சுமார் ரூ.250 கோடியில் புதிய ரெயில் பாலமும், ரூ. 100 கோடியில் ராமேசுவரம்–தனுஷ்கோடி வரையிலான ரெயில்பாதையும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்