ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் 4 ஆயிரத்து 200 வகை மலர்கள்

ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரத்து 200 வகை மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2019-05-04 23:00 GMT

ஊட்டி,

கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1995–ம் ஆண்டு 100–வது மலர் கண்காட்சி பூங்காவில் நடந்தது. அப்போது தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை தொடங்கி வைத்தார்.

ஊட்டி ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசனை முன்னிட்டு அந்த செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஊட்டி ரோஜா பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி தற்போதும் உள்ளது. அந்த ரோஜா செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு ரோஜா செடிகளும் உள்ளன. உலக ரோஜா சம்மேளனம் விசே‌ஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006–ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியது பெருமை ஆகும்.

சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுக்க நிழற்குடைகள், நிலா மாடம் ஆகியவை உள்ளன. கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன் உள்ளது. அங்கு டேபிள் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகிறது.

2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் வெட்டி விடப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது. பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். நிலா மாடம் அருகே மேரிகோல்டு மலர்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள், செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.

ஊட்டி ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பஸ்–ரூ.100, மேக்சிகேப்–ரூ.75, கார், ஜீப்–ரூ.40, ஆட்டோ–ரூ.10 என பார்க்கிங் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ரோஜா பூங்கா உள்ளது.

மேலும் செய்திகள்