ஈரோட்டில் இருந்து குவைத் நாட்டில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு சித்ரவதை; உயிருடன் மீட்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் கணவர் மனு

ஈரோட்டில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை செய்யப்படுவதாகவும், அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்றும் பெண்ணின் கணவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு கொடுத்தார்.

Update: 2019-05-04 23:30 GMT
ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ்கான் (வயது 48). இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு நவாஸ்கான் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது மனைவி யாஸ்மீன் (45). இவர் வீட்டு வேலைக்காக கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி குவைத் நாட்டுக்கு சென்றார். எனது அக்காள் மகன் நிஜாமின் எனது மனைவியை அழைத்து சென்று வேலைக்கு சேர்த்து விட்டார். அதன்பிறகு அவர் மாலத்தீவுக்கு வேலைக்காக சென்று விட்டார்.

குவைத் நாட்டுக்கு சென்றபிறகு எனது மனைவியிடம் பேசவே முடியவில்லை. அவரையும் அங்கிருந்தவர்கள் பேச அனுமதிக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு எனது மனைவியிடம் இருந்து எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசினேன். அப்போது எனது மனைவி அழுது கொண்டே ‘வீடியோ கால்’ மூலமாக பேசினார். அவரை அடித்து துன்புறுத்துவதாகவும், சம்பளத்தை கேட்டதற்கு கையில் சுடுநீரை ஊற்றி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அழுதபடி கூறினார். அவர் பேசிக்கொண்டே இருந்தபோது யாரோ ஒருவர் செல்போனை அவரிடம் இருந்து பிடுங்கி அழைப்பை துண்டித்துவிட்டார். எனவே எனது மனைவியை உயிருடன் மீட்டு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்