தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு ஊற்றும் தொண்டு நிறுவனம்

தண்ணீரை விலைக்கு வாங்கி ஒரு தொண்டு நிறுவனத்தினர் மரங்களுக்கு ஊற்றுகிறார்கள்.

Update: 2019-05-04 21:48 GMT

பெருந்துறை,

‘பசுமை சிறகுகள்‘ என்கிற தொண்டு அமைப்பு கடந்த வருடமாக விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அவைகளை பராமரித்து வருகிறது.

விஜயமங்கலம் மொடவாண்டிக்குட்டை, சந்தை பேட்டை, பெரிய ஏரி மற்றும் ஊர் பகுதிகளில் உள்ள ரோடு ஓரங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட்டு, அவற்றிற்கு முறையாக தண்ணீரும் ஊற்றி வருகின்றனர்.

தற்போது நிலவும் கடும் வறட்சியால் இவர்கள் நட்டு வளர்த்து வரும் மரங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் கருகத் தொடங்கின.

இந்தநிலையில் பசுமை சிறகுகள் அமைப்பினர் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக ஒரு டிராக்டர் மற்றும் 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர் டேங்கர் வாங்கினார்கள். பின்னர் அந்த டேங்கரில் விலைக்கு வாங்கப்பட்ட தண்ணீர் நிரப்பி மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகின்றனர். இவர்களின் பணிக்கு உதவும் வகையில், விஜயபுரி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் வேலை செய்யும் பெண்கள் 7 பேர், டிராக்டர் டேங்கரில் இருந்து தண்ணீரை குடங்களில் பிடித்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி வருகிறார்கள்.

தாங்கள் நட்டு வைத்த மரக்கன்றை காப்பாற்றுவதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் தொண்டு நிறுவனத்தினரை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்