கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய லாரி டிரைவர் போலீசார் விசாரணை
கோவில்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் லாரி டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் நாகராஜ் (வயது 34). இவர் சொந்தமாக லாரி வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருடைய மனைவி ரஞ்சினி (33). இவர்களுடைய மகள் அட்ஷிதா (14), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்தார். தற்போது பள்ளிக்கூட கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 29-ந்தேதி ரஞ்சினி தன்னுடைய மகளுடன் சென்னையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் நாகராஜ் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் நாகராஜின் வீட்டுக்கு அவருடைய உறவினர் ஒருவர் வந்தார். அப்போது நாகராஜின் வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அவர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்தார். அப்போது அங்கு நாகராஜ் தூக்கில் பிணமாக தொங்கியவாறு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாகராஜ் இறந்து 2 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.