சேலத்தில், கடந்த 4 மாதங்களில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.5¾ லட்சம் அபராதம் விதிப்பு

சேலத்தில், கடந்த 4 மாதங்களில் 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ.5¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2019-05-04 22:45 GMT
சேலம், 

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, கடைகளில் பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங் களில் கண்காணிப்பு குழுவினர் இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சூரமங்கலம் மண்டலத்தில் 565 கடைகளில் 3 ஆயிரத்து 104 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 452 கடைகளில் 924 கிலோ, அம்மாபேட்டை மண்டலத்தில் 706 கடைகளில் 4 ஆயிரத்து 188 கிலோ மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 699 கடைகளில் 2 ஆயிரத்து 298 கிலோ என மொத்தம் 2 ஆயிரத்து 422 கடைகளில் 10 ஆயிரத்து 517 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதாவது 10½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்த சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சத்து 71 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவினர் தினமும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்