பண்ருட்டி தங்கும் விடுதியில், பணம் வைத்து சூதாடிய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 22 பேர் கைது - ரூ.5½ லட்சம் பறிமுதல்
பண்ருட்டியில் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்ய அவர் உத்தரவிட்டார். இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு அறையில் 5 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதற்கு அவர்கள், தங்களை கைது செய்தால் உங்களை தீர்த்து கட்டிவிடுவோம் என்று போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.
இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர அவைத்தலைவர் ஆட்டோ குமார்(வயது 59), பண்ருட்டி எல்.ஆர். பாளையம் மனோகரன் (45), அங்குசெட்டிபாளையம் ஓடைத்தெரு ராம்குமார்(49), நெல்லிக்குப்பம் அம்மன் கோவில் தெரு அபிபுல்லா(39), பண்ருட்டி கொளப்பாக்கம் ரவிசங்கர் என்கிற கார்த்திக்(40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மற்றொரு அறையில் பணம் வைத்து சூதாடியதாக பண்ருட்டியை சேர்ந்த பத்மநாபன், சங்கர், ராமலிங்கம், பிரபுராஜ், மார்த்தாண்டன், மணிகண்டன், வேல்முருகன், இளையராஜா, கார்த்திகேயன், அருள், மகாலிங்கம், பாபு, சங்கரலிங்கம், ராஜாராம், ஆனந்தன், பார்த்திபன், ஏ.சங்கர் ஆகிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.