மது குடிக்க பணம் கேட்டு தகராறு: கட்டையால் அடித்து டிரைவர் கொலை

மதுகுடிக்க பணம் கேட்டு தாயாரிடம் தகராறு செய்த டிரைவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-05-03 23:45 GMT
திருக்கனூர்,

திருக்கனூர் காந்தி நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் விஜயதாஸ் (வயது 36), தனியார் ரெஸ்டாரண்டில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் விமல் (33) டிரைவர். சமீபகாலமாக இவர் மதுகுடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார்.

இதனால் விமல் மதுகுடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததார். மேலும் மது குடிப்பதற்காக தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலையிலும் தனது தாயார் விஜயாவிடம் விமல் பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த விஜயதாஸ் பணம் கேட்டு தகராறு செய்த விமலை தட்டிக்கேட்டார். இதில் அண்ணன்-தம்பி இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விஜயதாஸ், திடீரென வீட்டில் இருந்த கட்டையை எடுத்து விமலை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த விமல் கீழே விழுந்து பரிதாபமாகச் செத்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விஜயதாஸ் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார். கொலை செய்யப்பட்ட விமலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயதாசை வலைவீசி தேடி வருகிறார்கள். மது போதைக்கு அடிமையான தம்பியை அண்ணனே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருக்கனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்