கும்பகோணம் அருகே, ரெயில் மோதி வாலிபர் பலி - தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
கும்பகோணம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.;
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் - சுவாமிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ரெயில் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி இறந்த வாலிபரின் முகம் முழுவதுமாக சிதைந்துவிட்டதால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
உயிரிழந்த வாலிபர் காவி நிற வேட்டியும், பச்சை நிறத்தில் வெள்ளைக்கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவரது சட்டைப் பையில் ரூ.7-க்கான பஸ் டிக்கெட் மட்டும் இருந்தது.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, சிவராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மோதி இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.