பாதாளசாக்கடை பணிகள் முடிந்த நிலையில் சாலை அமைக்கப்படாததை கண்டித்து போராட்டம் தொழில் வணிகக் கழகம் அறிவிப்பு

பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் சாலை அமைக்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-03 22:27 GMT

காரைக்குடி,

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 77 தெருக்களில் முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பால் புதிய சாலைகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட்டது. நகராட்சி நிர்வாகம் ரூ.20 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்களை நியமித்து சாலை அமைக்கும் பணிகளுக்கான உத்தரவையும் கொடுத்துள்ளது. தற்போது தேர்தல் முடிந்து 15 நாட்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, லயன்ஸ் சங்க நிர்வாகி கண்ணப்பன், ரோட்டரி சங்க செயலாளர் கந்தசாமி, மனவளக்கலை மன்ற நிர்வாகி சையது ஆகியோர் ஒரு குழுவாக சென்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை சந்தித்து மனுக்கொடுத்தனர். அதில், தேர்தல் முடிந்து விட்டதால், நிலுவையில் உள்ள 77 தெருக்களிலும் உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும்.

மேலும் காலதாமதம் செய்தால் அடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரலாம். அதனால் பணிகளுக்குத் தடை வரக்கூடும், அடுத்து பருவமழை காலம் நெருங்குவதால் சிரமம் ஏற்படும். எனவே பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த நிலையில் 77 தெருக்களிலும் சாலைகள் அமைக்கும் பணிகளை இன்னும் 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

பணிகள் தாமதமானால் அதற்கு காரணமான அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். சாலை அமைக்கும் பணிகளுக்கு உதவியாக போக்குவரத்தை சீர்படுத்தவும் மாற்று வழியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்