மாவட்டத்தில் தொழிலாளர் தின விடுமுறைக்கு மறுநாள் ரூ.3¼ கோடி மது விற்பனை
தொழிலாளர் தினத்தையொட்டி மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதால் மறுநாளான நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான பார்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.
இதன்பின்னர் நேற்று முன்தினம் மதுபான விற்பனை வழக்கம்போல் நடந்தது. தொழிலாளர் தின விடுமுறைக்கு பிறகு இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டன. அப்போது வழக்கத்தை விட அதிகமாக மது விற்பனையாகி உள்ளது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வழக்கத்தை விட மதுபானங்கள் கூடுதலாக விற்பனையாகின. இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில் சுமார் ரூ.2¾ கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் நேற்று முன்தினம் ரூ.3 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனையானது. வழக்கத்தைவிட ரூ.65 லட்சத்திற்கு மதுபானங்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.