ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொலை: 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
ஒகேனக்கல் அருகே வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஜருகு குரும்பட்டியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27). மெக்கானிக். இவர் தனது உறவினரான 15 வயது சிறுமியுடன் கடந்த 1-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பியபோது பண்ணப்பட்டி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் சிறுமியை கையை பிடித்து இழுத்தனர்.
அதை தட்டிக்கேட்ட முனுசாமியை அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா தலைமையில் 5 தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் முனுசாமி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் தொடர் சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட சென்றவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.