குழந்தைகள் விற்பனை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
குழந்தைகள் விற்பனை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 260 பக்க ஆவணங்களை ஒப்படைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர்களாக செயல்பட்ட அருள்சாமி (47), ஹசீனா (26), செல்வி (29), லீலா (36) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே குழந்தைகள் விற்பனை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. விசாரணை அதிகாரிகளாக சி.பி.சி.ஐ.டி. சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, கைதான நபர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் உள்பட 260 பக்க ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்தார். இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி.யினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமுதவள்ளி உள்ளிட்ட சிலரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.யினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஓரிரு நாளில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையே ஆடியோவில் பேசிய அமுதவள்ளி விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சியில் ரூ.70 ஆயிரம் கொடுத்து சான்றிதழ் பெற முடியும் என கூறி இருப்பதால், போலி சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதா? எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் வாங்கப்பட்டு இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததால், அங்கு சுகாதாரத்துறையினர் 15 குழுக்களாக பிரிந்து வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.