கூடலூரில், குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர்
கூடலூரில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் வறட்சியால் கடந்த 1 மாதத்துக்கு மேலாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மழைக்காலமாக உள்ளது. இக்காலக்கட்டத்தில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கூடலூர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் பல்மாடி, ஹெலன் உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி காணப்படும்.
இருப்பினும் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கடும் வறட்சியால் தடுப்பணைகள் வறண்டு விட்டதால் தேவையான அளவுக்கு குடிநீர் வினியோகிக்க முடிய வில்லை என நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் தணிந்து கூடலூர் பகுதியில் குளிர்ந்த காலநிலை திரும்பி உள்ளது.
இதேபோல் தடுப்பணைகள் மற்றும் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு நகராட்சி நிர்வாகத்தால் தீர்வு காண முடிய வில்லை. அவ்வாறு 10 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கும் போது உடைந்த குழாய்கள் வழியாக குடிநீர் வீணாகி வருகிறது.
கூடலூர் அதிகாரிவயல், காளம்புழா, ஓவேலி சோதனைச்சாவடி உள்பட பல இடங்களில் உடைந்த குழாய்களில் இருந்து குடிநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது. இதனை சீரமைத்து அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உடைந்த குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீரும் பயனற்ற நிலையில் வழிந்தோடுகிறது. எனவே உடைந்த குழாய்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.