சாத்தனூர் அணை நீர்தேக்கப் பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு தண்ணீரில் வி‌ஷம் கலக்கப்பட்டதா? பொதுமக்கள் அச்சம்

சாத்தனூர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. தண்ணீரில் மர்மநபர்கள் வி‌ஷம் கலந்தது இதற்கு காரணமாக இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Update: 2019-05-03 22:30 GMT

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் பரந்து விரிந்த பரப்பளவில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதி பல கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்துள்ளது. செங்கத்தை அடுத்த தாழையூத்து கிராமம் அருகில் உள்ள சாத்தனூர் அணை நீர்த்தேக்க பகுதியில் தினமும் பல்வேறு ரக மீன்கள் பிடிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு மீன்பிடிப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ளது.

ஆனால் அனுமதியற்றவர்களும் இங்கு மீன்பிடிப்பதால் அவர்களுக்கும், குத்தகைக்கு எடுத்து மீன்வளர்ப்பு செய்து அதனை விற்பனைக்கு அனுப்பும் ஏலதாரர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.

அனுமதியின்றி மீன் பிடிப்பவர்களை தடுப்பதற்காக ஏலம் எடுத்தவர்கள் நீர்த்தேக்க பகுதிகளில் படகுகள் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் 2 பேரை மர்ம நபர்கள் சிலர் கல்லால் தாக்கியதில் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த 2 நாட்களாக செங்கம் அருகில் தாழையூத்து அருகே உள்ள சாத்தனூர் அணை நீர் தேக்கப்பகுதியில் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘செங்கம் பகுதிக்கு கூட்டுக் குடிநீர் எடுக்கும் பகுதிக்கு மேல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்ணீரில் சிறிது வெள்ளை நிறமாக தென்பட்டது. மறுநாளே இந்த இடத்தில் மீன்கள் செத்து மிதக்க தொடங்கின. இப்போது அவ்வாறு செத்த மீன்கள் குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை வந்து பார்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.

மீன்கள் செத்து மிதப்பதற்கு தண்ணீரில் மர்மநபர்கள் யாராவது வி‌ஷம் கலந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். தண்ணீரில் வி‌ஷம் கலந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் இடத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அந்த குடிநீரை பருகுபவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் வரலாம் என்பதால் அந்த மீன்களை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்