குடியாத்தம் அருகே பரபரப்பு கள்ளக்காதலி வீட்டில் பிணமாக கிடந்த ரிக்சா தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்

குடியாத்தம் அருகே கள்ளக்காதலி வீட்டில் ரிக்ஷா தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-03 22:15 GMT

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35). ரிக்சா தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு திருமணம்ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. மகேஷ் குடியாத்தம் தரணம்பேட்டை காய்கறி மார்கெட்டில் ரிக்சா ஓட்டி வந்தார்.

இவருக்கும் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி இரவு நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று மகேஷ் தங்கிவிட்டு மறுநாள்தான் வருவார். நேற்றுமுன்தினமும் அந்த பெண்ணின் வீட்டில் மகேஷ் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண்ணின் வீட்டில் மகேஷ் இறந்து கிடந்தார். இது குறித்து அறிந்த மகேசின் மனைவி முனியம்மா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் செதுக்கரைக்கு சென்று மகேசின் உடலை அந்த பெண்ணின் வீட்டிலிருந்து கள்ளூர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து மகேசின் மனைவி முனியம்மா, குடியாத்தம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ‘‘தனது கணவர் மகேஷ், செதுக்கரை பகுதியில் உள்ள கள்ளக் காதலி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கணவர் சாவில் சந்தேகம் உள்ளது. அது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என அதில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து மகேசின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்