ஆம்பூரில் லாரி, காருடன் ரூ.50 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் பெங்களூருவிலிருந்து கடத்தி வந்த 5 பேர் கைது

ஆம்பூரில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பெங்களூருவிலிருந்து லாரி, காரில் கடத்தி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-03 23:00 GMT

ஆம்பூர்,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தி வரப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆம்பூர் சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலூர் நோக்கி ஒரு லாரி வந்தது. அதனை பின்தொடர்ந்து ஒரு காரும் வந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் 2 வாகனங்களையும் நிறுத்தி விசாரித்தனர். அப்பாது காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி வந்து போலீசாரிடம், ‘‘நாங்கள் ஷூ வியாபாரம் செய்கிறோம். ஷூக்களைத் தான் கொண்டுதான் செல்கிறோம்’’ என தெரிவித்தனர். ஆனால் அவர்களது நடவடிக்கையில் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் லாரியில் இருந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ‘ஹான்ஸ்’, ‘குட்கா’, ‘கூல்லீப்’ உள்ளிட்ட போதைப் பொருட்கள் பண்டல் பண்டலாக இருப்பதும், பெங்களூருவில் இருந்து வேலூருக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

அதைத்தொடர்ந்து லாரியை ஓட்டிவந்த சேலம் தாதகாபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ்குமார் (வயது 32), சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சரவணன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் லாரிக்கு பாதுகாப்பாக காரில் வந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் (37), முகம்மத் பையாஸ் (29), கொணவட்டம் பகுதியை சேர்ந்த முகம்மத் கவுஸ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பாதுகாப்புக்காக வந்த கார் ஆகியவற்றை டவுன் போலீசார் பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற போதைப்பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்திருந்தாலும் அதனை மீறி ஆங்காங்கே கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை.

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவடத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மாவட்டம் முழுவதும் அனுப்பபடுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூரில் லாரியுடன் ரூ.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்