வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ள வசதியாக தேர்தல் நடத்தை விதியில் இருந்து விலக்கு : முதல்-மந்திரி கோரிக்கை ஏற்பு
வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ள வசதியாக தேர்தல் நடத்தை விதியில் இருந்து விலக்கு அளித்து மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டாலும், நாடு முழுவதும் இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க வேண்டி உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி தான் நடைபெறுகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.
மராட்டியத்தில் மரத்வாடா, விதா்பா உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி நிலவி வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் மாநிலத்தில் வறட்சி பாதித்த இடங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வசதியாக தேர்தல் நடத்தை விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
முதல்-மந்திரியின் கோரிக்கையை ஏற்று வறட்சி பாதித்த இடங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வசதியாக தேர்தல் நடத்தை விதியில் இருந்து மாநில தேர்தல் ஆணையம் விலக்கு அளித்து உள்ளது.
இதையடுத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வறட்சி பாதித்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்து மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார்.