நெல்லையில் என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்

நெல்லையில் என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர்.

Update: 2019-05-02 21:30 GMT
நெல்லை,

தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ- மாணவிகள் ஆன்லைன் (இணையதளம்) மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே கணினி மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆன்லைனில் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும் மாணவர்களுக்கு உதவுவதற்காக உதவி மையங் கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய சிறப்பு மையம் அமைக் கப்பட்டு உள்ளது. இதே போல் பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஐசக் சாலமோன் ஜெபமணி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் சித்தார்த் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முதல் நாளிலே ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களது என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தனர். இங்கு பதிவு செய்ய வரும் மாணவ-மாணவிகள் விண்ணப்பத்துக்கு உரிய கட்டணத்தை விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

அவ்வாறு செலுத்த முடியாதவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலை எடுத்து வரவேண்டும். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் வழங்க வேண்டும். இந்த மையத்தில் வருகிற 31-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்