சிக்கண்ணா அரசு கல்லூரி சேவை மையத்தில், என்ஜினீயரிங் படிப்புக்கு முதல்நாளில் 50 பேர் விண்ணப்பித்தனர்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு முதல்நாளில் 50 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

Update: 2019-05-02 22:45 GMT
திருப்பூர்,

தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் வசதிக்காக விண்ணப்பிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் 2019-20-ம் ஆண்டில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். படிப்பில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்காக தமிழ்நாட்டில் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ராமையா தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி செண்பகவள்ளி தொடங்கி வைத்தார். தொழில்நுட்பத்துறை இயக்குனரக அதிகாரி அன்பரசு மேற்பார்வையில் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.

மாணவர்கள் தங்கள் பெயர், இ-மெயில் முகவரி, செல்போன் எண், பெற்றோர் பெயர், முகவரி, மதம், சாதி, பிறந்த தேதி, ஆதார் எண், பெற்றோர் ஆண்டு வருமானம், குடும்பத்தில் முதல்பட்டதாரி என்றால் அதன் விவரம், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு, விளையாட்டு வீரர் போன்ற விவரங்கள், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்தவர் என்றால் படித்த ஆண்டு, பள்ளிகள் விவரம், பிளஸ்-2 தேர்வில் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் போன்றவற்றை மாணவர்களே விண்ணப்பத்தில் பதிவு செய்தனர். அப்போது ஏற்பட்ட சந்தேகங்களுக்கு கல்லூரியில் இருந்து நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் ராமையா கூறும் போது, “ இந்த மையம் வருகிற 31-ந்தேதி வரை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படும். முதல்நாளான நேற்று 50 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். வீட்டில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பதிவுக்கு பிறகு மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கப்படும். அதற்கு பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு போன்றவை நடைபெறும்” என்றார்.

மேலும் செய்திகள்