தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விதிமீறல் , 4,723 வழக்குகள் பதிவு - டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா பேட்டி
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4,723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா கூறினார்.;
கோவை,
சூலூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பிரிவு டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா நேற்று சூலூரில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பிரிவு ஐ.ஜி. சேஷசாயி, கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜித் குமார் (கோவை), கயல்விழி (திருப்பூர்), கோவை நகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மற்றும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சூலூர் தொகுதியில் மொத்தம் 121 இடங்களில் 324 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த தொகுதியில் 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சூலூர் தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டத்தில் 25 இடங்களிலும், கோவை மாநகரில் 4 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 6 இடங்களிலும் என மொத்தம் 35 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முழு அளவில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் இன்றி அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான புகார்கள் வந்தால் 1950 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். சூலூரில் 66 வாக்கு சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
பணம் கொடுப்பதை தடுக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின்போது விதிமீறல் தொடர்பாக 4,723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சூலூர் தொகுதியில் மட்டும் தற்போது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சூலூரில் 4,123 போலீசார் தேர்தல் பணியில் உள்ளனர்.
சூலூர் தொகுதியில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்ற 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உறுதி பிணைப்பத்திரம் பெறப்பட்டு தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கடைபிடிக்கப்பட்டதுபோல், சூலூர் தொகுதியிலும் 26 இருசக்கர வாகன ரோந்து படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 23 வாகனங்களிலும் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘சில ரகசியமான தகவல்களை வெளியிட முடியாது என்றும், இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கேட்க வேண்டாம்’ என்றும் கூறினார்.
‘மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அதிகாரிகள் நுழைந்தது தொடர்பாக தங்களுக்கு எப்போது தகவல் கிடைத்தது? என்று நிருபர்கள் கேட்டதற்கு, இரவில்தான் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
‘சூலூர் தொகுதியில் பணம்பட்டுவாடா செய்யப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாகவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான மண்டபங்களில் அரசியல் கட்சியினர் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறினார்.