சென்னை பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கை வாலிபர் கைது கள்ளதோணியில் தமிழகம் வந்தது அம்பலம்
பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கை வாலிபர், பாஸ்போர்ட், விசா இன்றி கள்ளதோணியில் தமிழகம் வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 253 பேர் பலியானார்கள். 500–க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்தியாவிலும் இதுபோல் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருக்கிறார்களா? என இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்பும், அதன்பிறகும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்தனர்.
இதற்கிடையில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், இலங்கையை சேர்ந்த சிலர், பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிவித்தார்.
அவர்கள் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம்? என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அந்த குடியிருப்பில் 800 குடும்பத்தினர் வசித்து வருவதால் அதில் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள், குறிப்பிட்ட அந்த வீட்டை கண்டுபிடித்தனர். அந்த வீட்டில் இலங்கையை சேர்ந்த 5–க்கும் மேற்பட்டோர் தங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் இலங்கையை சேர்ந்த தானுகா ரோசன் (வயது 33) என்ற வாலிபரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை என்பதும், அவர் மீது கொழும்பில் ஒரு கொலை வழக்கு உள்ளதும் தெரிந்தது.
கொலை வழக்கு உள்ளதால் அவர் முறையாக பாஸ்போர்ட், விசா எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 8 மாதத்துக்கு முன்பு கள்ளதோணியில் ராமேசுவரம் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தார். பின்னர் சென்னைக்கு தப்பி வந்த அவர், குன்றத்தூரில் தங்கி உள்ளார். சுதர்சன் என்ற பெயரில், குன்றத்தூர் மேத்தா நகர் முகவரியில் வசிப்பது போல் ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் வாங்கி வைத்து உள்ளார்.
கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் பூந்தமல்லியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ.25 ஆயிரம் வாடகைக்கு குடிவந்துள்ளார். வசதியான குடும்பத்தை சேர்ந்த அவரை பார்க்கவே மற்றவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுற்றுலா விசா மூலம் இங்கு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் தானுகா ரோசனை பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து, அனுமதி இன்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக தானுகா ரோசனை கைது செய்தனர்.
அவரது வீட்டில் தங்கி இருந்த மற்றவர்களிடம் உரிய ஆவணங்கள், விசா இருந்ததால் அவர்களிடம் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்ததால் தானுகா ரோசனிடம் மட்டும் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தானுகா ரோசன், சென்னையில் தங்கி இருந்தபோது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்?. அவருக்கும், இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.