விசைத்தறி தொழிலாளர்கள் மீது தாக்குதல்: தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேர் கைது

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-01 23:30 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து போலீஸ் நிலையத்தை தொழிற்சங்கத்தினர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மே தினத்தையொட்டி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தினர் குமாரபாளையம் நகரில் சில இடங்களில் கொடி ஏற்றுவிழா நடத்தினர்.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர் அருகில் கொடி ஏற்ற வந்த போது அங்கு ஒரு தறிப்பட்டறை இயங்கி கொண்டு இருந்தது. அங்கு தொழிலாளர்கள் சரவணன் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் விசைத்தறி ஓட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுப்பிரமணியம், தண்டபாணி, பெரியசாமி, புகழேந்தி, சண்முகம், தாமோதரன், கணேசன், செல்வம் ஆகிய 9 பேர், அவர்களிடம் கூலி உயர்வுக்காக போராடி கொண்டிருக்கிறோம், நீங்கள் தறி ஓட்டுவதால் போராட்டம் பலவீனம் அடைகிறது, தறி ஓட்டுவதை நிறுத்துங்கள், கூலியை உயர்த்தும் வரை தறி ஓட்டக்கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியது. இதில் தொழிலாளர்கள் சரவணன், மாதேஸ்வரன் ஆகியோரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக சரவணன், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மாதேஸ்வரன் தன்னையும், சரவணனையும் ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகிகள் தாக்கி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகிகள் 9 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே தொழிற்சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்த தகவல் தொழிற்சங்கத்தை சேர்ந்த பலருக்கும் தெரியவந்தது. இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர், அப்பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்