சத்தியமங்கலம் பகுதியில் பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது

சத்தியமங்கலம் பகுதியில் பிரபல வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-01 23:15 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள அக்கரைநெகமம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தன்னுடைய மகளுக்கு ரூ.90 ஆயிரம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.

சத்தியமங்கலம் அருகே வந்தபோது திடீரென அந்த மர்மநபர், செல்வராஜியின் மோட்டார் சைக்கிளை மறித்தார். மேலும், கத்தியை காட்டி மிரட்டி செல்வராஜ் வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை பறித்துக்கொண்டார். பின்னர் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து செல்வராஜ் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் இருந்து பணத்தை பறித்துச்சென்ற மர்மநபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம், நம்பியூரை சேர்ந்த கல்லூரி மாணவரான வெங்கடாசலம் (20) என்பவரிடம் மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.500 பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து வெங்கடாசலம் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து, தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் போலீசார் நம்பியூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தார். இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் நம்பியூர் அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியை சேர்ந்த கார்த்திக் (30) என்பதும், இவர்தான், சத்தியமங்கலம் பகுதியில் செல்வராஜ் மற்றும் கல்லூரி மாணவர் வெங்கடாசலத்திடம் கத்தியை காட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

மேலும், கார்த்திக் மீது கவுந்தப்பாடி, கோபி, நம்பியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபல கொள்ளையன் கார்த்திக்கை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்