புதியம்புத்தூரில் போலீஸ்காரருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
புதியம்புத்தூரில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் தாமோதரன் (வயது 22) கூலி தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டாம்.
கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு தாமோதரன் தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவும் வீட்டுக்கு மதுகுடித்துவிட்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த செல்வராஜ், தாமோதரனை கண்டித்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்
இதனால் மனமுடைந்த தாமோதரன் கையில் கத்தியுடன் இரவு 12 மணிக்கு புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது போலீஸ்காரர் பேச்சிமுத்து மற்றும் சிலர் இருந்தனர். தாமோதரன் போலீசாரிடம், என்னை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறினார். பேச்சிமுத்து, தாமோதரன் கையில் கத்தி வைத்து இருப்பதை பார்த்த உடன், அந்த கத்தியை வாங்க முயன்றார். அப்போது தாமோதரன் கத்தியை கொடுக்க மறுத்த போது கத்தி, பேச்சிமுத்துவின் இடது கையில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த பேச்சிமுத்துவை சக போலீசார் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து புதியம்புத்தூர் போலீசார், தாமோதரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.