கருக்கலைப்பில் பெண் சாவு, தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் கைது - நாகையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது சிக்கினார்
கருக்கலைப்பின்போது பெண் இறந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். நாகையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தபோது சிக்கினார்.
நெகமம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி வனிதாமணி (வயது 37). இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வனிதாமணி மீண்டும் கர்ப்பமானார். 5 மாத கர்ப்பமாக இருந்த அவர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் வடசித்தூரில் ஆயுர்வேதிக் சென்டர் என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவந்த முத்துலட்சுமியை அணுகினார். இதனைத்தொடர்ந்து முத்துலட்சுமி, சித்தா மருத்துவம் படிக்கும் தனது மகன் கார்த்திக்கிடம் (25) ஆலோசனை பெற்று வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டதாக தெரிகிறது.இதில் உடல்நிலை மோசமானதால் வனிதாமணியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முத்துலட்சுமி ஆயுர்வேதம் தொடர்பாக எந்த படிப்பும் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததும் அவர் ஒரு போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. தனது குட்டு உடைந்ததை தொடர்ந்து போலி டாக்டர் முத்துலட்சுமி, அவருடைய மகன் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து அவர்களை பிடிக்க நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலி டாக்டரையும், அவரது மகனையும் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையில் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமிக்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனைக்கு ‘சீல்‘ வைத்தனர்.
இந்த நிலையில் போலி டாக்டர் முத்துலட்சுமி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் கார்த்திக் என்ற உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற தனிப்படை போலீசார் போலி டாக்டர் முத்துலட்சுமியை கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி கடந்த 15 ஆண்டுகளாக வடசித்தூர் பகுதியில் போலி மருத்துவமனை நடத்தி அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவர் மீது சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் முத்துலட்சுமி மருத்துவமனையை சோதனையிட வந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் கடந்த சில மாதங்களாக மருத்துவமனை செயல்படாமல் இருந்தது.
தற்போது முத்துலட்சுமி மீண்டும் மருத்துவமனையை திறந்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கருக்கலைப்புக்கு வந்த வனிதாமணி தவறான சிகிச்சையால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலி டாக்டர் போலீசில் சிக்கிக்கொண்டார்.
அவருக்கு ஆலோசனை வழங்கிய அவருடைய மகன் கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.