தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி: அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைக்கவே 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு நடவடிக்கை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியானதால் அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைப்பதற்காகவே 3 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சண்முகையா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கினார். தாளமுத்துநகர் பகுதியில் திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை. என்றைக்கும் உங்களுக்காக பணியாற்றக்கூடியவர்கள் நாங்கள். அந்த உரிமையில் உங்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்து உள்ளேன்.
சசிகலாவின் காலில் விழுந்த பின்னர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்றால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் ஓட்டப்பிடாரம் தொகுதி. கடந்த ஒரு ஆண்டாக இந்த தொகுதி எம்.எல்.ஏ. இல்லாமல் அனாதையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
ராகுல்காந்தி பிரதமராக பொறுப்பேற்று மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறார். இங்கு உள்ள அ.தி.மு.க. ஆட்சி கேள்விக்குறியாக தான் உள்ளது. அது திரிசங்கு சொர்க்கத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தான் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. இதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடும்.
தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ இல்லையோ அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து இறங்கி விடும். இந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே தான் அ.தி.மு.க. அரசு தற்போது ஒரு சதி செய்து உள்ளது. 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க முடிவு செய்து உள்ளது. இதனால் சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அந்த நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லை என்று நான் ஒரு மனு அனுப்பி உள்ளேன். அவர் மீதே நம்பிக்கை இல்லை என்றால், அவர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இதுதான் நீதிமன்ற உத்தரவு. அதையும் மீறி இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் நடவடிக்கையில் நிச்சயமாக ஈடுபடப்போகிறார்கள் என்பது உறுதி.
இதனை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கு பணியாற்றும் ஆட்சியாக இல்லை. ஆகையால் வருகிற 19-ந் தேதி நடைபெறும் தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குறிப்பாக மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், பண்டாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். அவர்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்படும். ஆட்சிக்கு வந்த உடன் உணவு பூங்காவை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் வேலைவாய்ப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்.
தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. இதனால் ஓட்டப்பிடாரத்தை தலைமை இடமாக கொண்டு போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரே ஒரு ரெயில் சேவை மட்டும் உள்ளது. கூடுதல் ரெயில் சேவை கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். வ.உ.சி. வக்கீலாக பணியாற்றிய ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் பாழடைந்து உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என்று தெரிவித்து கொள்கிறேன்.
தி.மு.க. சார்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கி அ.தி.மு.க. ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளைக்கு காரணம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தான் என்பது நாடறிந்த உண்மை. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு நிலங்களை பாதுகாத்து கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருணாநிதி சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். நானும் சொல்வதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். அந்த உரிமையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தருவைகுளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக தூத்துக்குடி அன்னை இந்திராநகர் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. வேட்பாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
தேர்தல் அறிவிக்கும் முன்பு தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்களின் பிரச்சினை, குறைகளை கேட்டோம். எங்களை போன்று கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் ஊராட்சி சபை கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டோம். இதனை நான் பெருமையாக சொல்கிறேன்.
இந்தியாவில் எந்த கட்சியும் கிராம அளவில் மக்களை தேடி சென்று குறைகளை கேட்டது இல்லை. ஏறக்குறைய 8 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது மக்கள் தெரிவித்த குறைகளில் 75 சதவீத பணிகள், உள்ளாட்சி தேர்தல் நடந்து இருந்தால் முடிவடைந்து இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளோம்.
தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடந்து உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியில் கனிமொழி எம்.பி. பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். இங்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக தான் கனிமொழி எம்.பி. இங்கேயே வீடு எடுத்து தங்கி உள்ளார்.
காலையில் பெரியநாயகிபுரம் கிராமத்துக்கு சென்றேன். அங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு பெண் என்னை சந்தித்து பேசினார். அவர் இந்த முறை தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக கூறினார். காரணம் இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. மேலும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிகொண்டு வருவோம் என தி.மு.க. உறுதிமொழி கொடுத்து உள்ளது. அதனால் நான் தி.மு.க.விற்கு தான் ஓட்டு போட்டேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.