திருப்பரங்குன்றம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

Update: 2019-05-01 23:00 GMT

திருப்பரங்குன்றம்,

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் பிரசாரம் செய்கிறார். 2 நாட்களும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக அவர் மதுரையில் 2 நாட்கள் தங்குகிறார்.

தமிழ் மொழியை செம்மொழியாக கொடுத்த பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊரான விளாச்சேரியில் தனது தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்குகிறார். பின்னர் விளாச்சேரியில் இருந்து புறப்பட்டு திருநகர், ஹார்விப்பட்டி, அவனியாபுரம், பெருங்குடி பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்

தொடர்ந்து 4–ந்தேதி காலை 9 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான நிலையூர் கைத்தறி நகரில் நெசவாளர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதனைத்தொடர்ந்து அன்று மாலை 5.30 மணிக்கு மதுரை மகாலுக்கு சுரங்கப்பாதை அமைந்த இடமாக கருதப்படும் கூத்தியார்குண்டுவில் பிரசாரம் செய்து, அங்கிருந்து தோப்பூர், தனக்கன்குளம், வேடர்புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் நாகமலைபுதுக்கோட்டையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

மேலும் செய்திகள்