பஸ் இயக்கத்தில் குளறுபடி: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நெல்லை சந்திப்பு பஸ் நிறுத்தம்
பஸ் இயக்கத்தில் உள்ள குளறுபடியால் நெல்லை சந்திப்பு பஸ் நிறுத்தம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.78½ கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடுக்குகளாக கட்டப்படுகிறது. இதற்காக பஸ் நிலையத்தின் உள்பகுதி மூடப்பட்டு கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதையடுத்து பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலையே பஸ் நிறுத்தமாக மாறிவிட்டது.
இங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் நெல்லை -தென்காசி இடையே இயக்கப்படும் பஸ்கள் சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதையடுத்து மதுரை ரோட்டில் போலீஸ் சிக்னல் பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வருகிற கார் உள்ளிட்ட வாகனங்கள் வெளியே செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் தினமும் போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடி வருகிறது.
இதற்கு பஸ் இயக்கத்தில் உள்ள குளறுபடியே காரணம் ஆகும். மதுரை ரோட்டில் பேக்கரி கடை முன்பு புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தி ஆட்களை ஏற்றிச்செல்கிறது. இந்த பஸ் மீண்டும் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதி ரோட்டில் ஐகிரவுண்டு மற்றும் டவுனுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்லும் பகுதிக்குள்ளேயும் நுழைந்து செல்கிறது. இதே போல் குறுக்குச்சாலை, ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்களும், சங்கரன்கோவிலில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வரும் ஒருசில அரசு பஸ்களும் சந்திப்பு பஸ் நிலைய பகுதியாக வந்து ஆட்களை இறக்கி, ஏற்றி செல்கின்றன.
இதை அறிந்த போக்குவரத்து போலீசார் நேற்று நெல்லை சந்திப்பில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு இயக்கப்படும் பஸ்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் பயணிகளை ஏற்றிய பிறகு மீண்டும் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதிக்குள் நுழையக்கூடாது என்று கூறினர். ஆனால் அதையும் மீறி சென்ற டிரைவர், கண்டக்டர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சந்திப்பு பஸ் நிலையமாக இருந்தது, தற்போது பஸ் நிறுத்தமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இங்கு வருகிற பஸ்கள் உடனுக்குடன் பயணிகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டு செல்ல வேண்டும். தனியார் பஸ்கள் விதிமீறலில் செயல்பட்டால் டிரைவர், கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சந்திப்பு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்” என்றனர்.