கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் மதுபானம் பதுக்கிய அ.ம.மு.க. பிரமுகர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் மதுபானம் பதுக்கிய அ.ம.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி அரசு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இதனை பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே திண்டுக்கல் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் பழனி சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சரஸ்வதிநகரில் உள்ள திண்டுக்கல் வடக்கு பகுதி அ.ம.மு.க. செயலாளர் பாண்டி வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பெட்டி, பெட்டியாக மதுப்பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. பாண்டியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,500 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பதற்காக அவர் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் நாகல்நகரில் மதுபானம் விற்ற நிலக்கோட்டையை சேர்ந்த சுரேஷ், சிறுமலை பிரிவை சேர்ந்த சசிகுமார் ஆகியோரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.