கார்-வேன் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலி; 17 பேர் படுகாயம்

மீன்சுருட்டி அருகே கார், வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் பலியாயினர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான 3 பேரும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள்.

Update: 2019-05-01 23:15 GMT
அரியலூர்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர், கே.எம்.நகரை சேர்ந்தவர் குமார் மகன் நித்தியானந்தன்(வயது 23). இவர் கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர்கள் மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர்களான ரகுபதி மகன் பிரபாகரன் (20), மனோகரன் மகன் சஞ்சய் (18). இவர்களில் பிரபாகரன் ஏ.சி.மெக்கானிக் படிப்பு படித்து வந்தார். சஞ்சய் ஐ.டி.ஐ. படித்து வந்தார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கோவிலில் நித்தியானந்தன் தனது நண்பர்களுடன் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை வீட்டிற்கு செல்ல காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மீன்சுருட்டி அருகே மெய்காவல்புத்தூர் கிராமத்தில் காலை 7 மணியளவில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக காரும், எதிரே வந்த வேனும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் நித்தியானந்தன், பிரபாகரன், சஞ்சய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவ அபுபக்கர் மனைவி ஷாஜிதாசுல்தானா (37), அபுபக்கர் மகள்கள் அப்ரா (14), ஆபியாதாஜ்தீன் (16) மற்றும் ஜீனைதாபேகம் (38), அஸ்மாஜான் (40), முகமதுசபிக் மகள் ஜீமானா (10), முகமதுசார்புதீன் (17), அபுபக்கர் (47), வேன் டிரைவர் ஆசிக்அலி (33) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து 17 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்