தலைமை செயலாளர், 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

10 ஆண்டுகளில் 27 முறை பணி இடமாற்றம் செய்யப்பட்ட அரசு அதிகாரி கர்நாடக அரசு தலைமை செயலாளர், 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.

Update: 2019-04-30 22:34 GMT

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நிர்வாக புனரமைப்பு மற்றும் ஆள்சேர்ப்பு பிரிவில் ‘சகாலா’ மிஷனில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் மதாய். இவர் பெங்களுரு உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், மதாய் கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு புகார் செய்தார்.

அதில், ‘மண்டியா வளர்ச்சி குழுமத்தில் நடந்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்த பிறகு தொடர்ச்சியாக நான் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 27 முறை பணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறேன். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். என்னை தொடர் பணி இடமாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ‘தொடர் பணி இடமாற்றத்துக்கு காரணமான கர்நாடக தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கவுதம் பாகதி, அனில் குமார், சிவக்குமார், ரமனரெட்டி, ஹிரேமட், சீனிவாஸ், அஞ்சும் பர்வேஸ், லட்சுமி நாராயணன், கல்பனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரை முதலில் மாநில மனித உரிமைகள் ஆணையம் வாங்க மறுத்தது. அதாவது, இதுபோன்ற புகார்களை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்காது என ஆணையத்தினர் கூறினர். ஆனால், மதாய் விடவில்லை. தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை எடுத்துக்கூறினார்.

இதையடுத்து, அவருடைய புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் வாங்கி பதிவு செய்துள்ளது. இந்த புகார் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையம் புகார் பதிவு செய்து இருப்பது கர்நாடக வரலாற்றில் முதன் முறையாகும்.

மேலும் செய்திகள்