வள்ளியூர் அருகே சூறைக்காற்றில் 65 ஆயிரம் வாழைகள் நாசம் 2 வீடுகள் சேதம்
வள்ளியூர் அருகே பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் 65 ஆயிரம் வாழைகள் நாசமாயின. மேலும் 2 வீடுகள் சேதம் அடைந்தன.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் கேசவனேரி ஜீவாநகரை சேர்ந்த மணி (வயது 47) மற்றும் ஆனந்தராஜ் (51) ஆகியோரது வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்து, கற்கள் கீழே விழுந்தன. இதில் வீட்டில் இருந்த பீரோ, டி.வி., பிரிட்ஜ், கியாஸ் அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதே போல் தெற்கு வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளான கலந்தபனை, அம்மச்சி கோவில், விசுவாசபுரம், கோபாலசமுத்திரம், நந்தகோபாலசமுத்திரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.
இந்த சூறைக்காற்றில் 65 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளும், வீட்டின் உரிமையாளர்களும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.