காட்கோபரில் பக்கத்து வீட்டுக்கு தீ வைத்த போதை ஆசாமி கைது

தனது மனைவியை அடித்ததை கண்டித்தவரின் வீட்டுக்கு தீ வைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-29 23:31 GMT
மும்பை, 

மும்பை காட்கோபர் பந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் அலோக் வர்மா(வயது35). இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் குடிபோதையில் வந்து மனைவியிடம் சண்டையிட்டார்.

மேலும் சாப்பாட்டை தூக்கி வெளியில் வீசி சமையல் பாத்திரங்களை உடைத்து மனைவியையும் தாக்கி இருக்கிறார்.

இதைப்பார்த்து பயந்துபோன அவரது மகன் வெளியில் ஓடிவந்து பக்கத்து வீட்டை சேர்ந்த தமிழர் ராஜகோபால் என்பவரிடம் தனது தாயை தந்தையிடம் இருந்து காப்பாற்றும்படி அழுது இருக்கிறான்.

உடனே ராஜகோபால் அங்கு சென்று அலோக் வர்மாவை கண்டித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த அலோக் வர்மா அவரையும் மிரட்டி உள்ளார். குடிபோதையில் பேசுவதாக நினைத்த ராஜகோபால் அவரது பேச்சை பொருட்படுத்தவில்லை.

இந்தநிலையில், அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் ராஜகோபாலின் வீட்டு கதவு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அவரது குடும்பத்தினர் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தண்ணீரை ஊற்றி அந்த தீயை அணைத்தனர். எப்படியோ தீ விபத்து ஏற்பட்டு விட்டதாக முதலில் அவர்கள் கருதினர். பின்னர் அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். அதில், நள்ளிரவில் அலோக் வர்மா பெட்ரோலை ராஜகோபால் வீட்டின் மீது ஊற்றி தீ வைத்த காட்சி பதிவாகியிருந்தது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ராஜகோபால் பந்த்நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலோக் வர்மாவை கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்