பொள்ளாச்சி பாலியல் சம்பவம், மிரட்டல் ஆடியோவில் பேசியது நான் இல்லை - பார் நாகராஜ் மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக ‘மிரட்டல் ஆடியோவில் பேசியது நான் இல்லை’ என்று பார் நாகராஜ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2019-04-29 23:30 GMT
கோவை,

கோவை பொள்ளாச்சி- ஊத்துக்குளி ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் பார் நாகராஜ் (வயது 28). இவர் பொள்ளாச்சி பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் பார் நாகராஜ் உள்பட 3 பேர் புகார் கொடுத்த ஒரு பெண்ணை மிரட்டுவது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ஆடியோ கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பார் நாகராஜ் நேற்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் நான் உள்பட 3 பேர் பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. அதில் மோசடி புகாரை திரும்பப்பெற கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுவிப்பது போன்ற ஆடியோவில் பேசியது நான் இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், என்னை சிக்க வைப்பதற்காக இந்த மாதிரி நாடகமாடப்படுகிறது.அந்த ஆடியோவில் பேசிய பெண் உள்பட இதற்கு காரணமானவர்கள் மீதும், அதன் உண்மைத்தன்மை பற்றி கண்டறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தால் நான் மனவேதனை அடைந்துள்ளேன். எனவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்