நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் தினகரன் கட்சியில் இருக்கிறோம் என்று கூற தயாரா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

‘‘நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் தினகரன் கட்சியில்தான் இருக்கிறோம் என்று கூற தயாரா?’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

Update: 2019-04-29 23:15 GMT

மதுரை,

மதுரையில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எதனால் நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெற உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.

துரைமுருகன் எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்பார். அவர் கூறிய கருத்து ஒவ்வாத கருத்தாக இருக்கும். தர்மயுத்தம் நடத்திய காலத்தில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் பேசிய கருத்துக்கு நான் எவ்வித பதிலும் கூறியதே இல்லை. பா.ஜ.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது முட்டாள்தனமான கருத்து.

ஒரு கட்சியில் ஒருவர் உறுப்பினராக இருந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அவர் மற்றொரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்தால், அவரால் எம்.எல்.ஏ. பதவியை தொடர முடியாது. எனவே விளக்கம் கேட்கப்பட்டுள்ள 3 சட்டமன்ற உறுப்பினர்களும், அ.ம.மு.க.வில் இணையவில்லை என்றால் சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பியபோது, அவரிடம் வந்து விளக்கம் அளித்து இருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மேலும் 3 பேர் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் சட்டபேரவை தலைவரிடம் உள்ளன.

அவர்களுக்கு தைரியம் இருந்தால் நாங்கள் தினகரன் கட்சியில்தான் இருக்கிறோம் என்று கூற தயாரா? அப்படி கூறினால், அது அவர்களின் வீரத்துக்கு அழகு. இல்லையென்றால் அது கோழைத்தனம்.

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உரிய மரியாதை, உரிய வாய்ப்பு கண்டிப்பாக வழங்கப்படும். அடிப்படை தொண்டன் கூட முதல்–அமைச்சராக வரக்கூடிய தகுதி அ.தி.மு.க.வில்தான் உண்டு. நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். இதேபோல் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றியை பெறும். திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்