மதுரை விமான நிலையத்தில் ரூ.28¾ லட்சம் தங்கம் பறிமுதல் ராமநாதபுரம், திருச்சியை சேர்ந்தவர்கள் சிக்கினர்

மதுரை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.28¾ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-29 23:00 GMT

மதுரை,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அந்த விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த அப்துல்ரகீம் ரியாஸ்(வயது 30) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர் ஆசனவாயில் களிமண் போன்ற ஒரு பொருளில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் தீயில் எரித்து சோதனை செய்து பார்த்தபோது, சுமார் 395 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் இருக்கும். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த பார்த்தீபன்(32) என்பவரும், களிமண் போன்ற பொருளில் தங்கத்தை கலந்து ஆசனவாயில் வைத்து கடத்தி வந்துள்ளார். அவரிடம் 500 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 4 ஆயிரம் இருக்கும். இந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ஒரேநாளில் ரூ.28 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘களிமண் போன்ற பொருளில் தங்கதுகள்களை கலந்து கடத்தி வந்தால் அவற்றை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கண்டுபிடிக்க இயலாது. இதனால் தான் அவர்கள் இவ்வாறு நூதனமுறையில் தங்கம் கடத்தி வந்துள்ளனர்.

பிடிபட்ட 2 பேரும், தங்க கடத்தலில் ஈடுபடும் ‘குருவிகள்‘ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் வேலை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பொருட்களை கடத்தி செல்வது தான். பொருட்களின் மதிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. பணத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்றனர்.

மேலும் செய்திகள்