கணக்கில் வராத பணம் சிக்கிய வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் ஆஜர்

வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் சிக்கியது தொடர்பான வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் ஆஜரானார்.

Update: 2019-04-29 22:55 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மின்சாரத்துறை மந்திரியாக பணியாற்றியவர் டி.கே.சிவக்குமார். தற்போது அவர், முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியாக உள்ளார்.

கடந்த ஆட்சியில் டி.கே.சிவக்குமார், மின்சாரத் துறை மந்திரியாக இருந்த போது அவரது வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது, ரூ.8½ கோடி, கணக்கில் வராத பணம் சிக்கியதாக வருமான வரித்துறை கூறியது. இது தொடர்பான வழக்கு விசாரணை, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் விசாரணைக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி டி.கே.சிவக்குமார் சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் ஆஜரானார்.

டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், டி.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில் கிடைத்த பணம் ரூ.41 லட்சம் என்றும், அந்த பணம் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் மற்றும் தாய்க்கு சொந்தமானவை என்றும் வாதிட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்றும் (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.

மேலும் செய்திகள்