திருபுவனை அருகே ஆன்- லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது

திருபுவனை அருகே ஆன்-லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-29 22:52 GMT
திருபுவனை,

திருபுவனை அருகே மதகடிப்பட்டு ஏரிக்கரையில் செல்போனை பயன்படுத்தி ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக தகவல் கிடைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நடராஜன், பார்த்தசாரதி ஆகியோர் மதகடிப்பட்டுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் செல்போனில் பேசியபடி தங்களிடம் இருந்த காகிதத்தை பார்த்து தகவல்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் ஆன்-லைன் மூலம் விற்ற லாட்டரி சீட்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு முடிவுகளை தெரிவித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் கொத்தபுரிநத்தம் ராஜாராம் (வயது 40) மற்றும் திருபுவனை சந்திரசேகர் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 2 செல்போன்கள், லாட்டரி சீட்டு விற்ற ரூ.3,460 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்