மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் திடீர் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-04-29 22:45 GMT
மதுரை,

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக கோவில்கள், விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து துணை சூப்பிரண்டு வசந்தன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவு குழுவினர் நேற்று காலை 9 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலின் உள்பகுதி மற்றும் வெளிப்புறங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதனை வீடியோ எடுத்து கொண்டனர்.

பின்னர் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் விவரம், கோவிலில் உள்ள கடைக்காரர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விவரம், அதனை கண்காணிக்கும் விதம் குறித்தும் கேட்டறிந்தனர்.

அதைதொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டமும் நடந்தது.

மேலும் செய்திகள்