திருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் 650 கிலோ பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

திருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் 650 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-04-29 22:42 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துவோரை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பணி காரணமாக பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 21-ந் தேதி செய்தி வெளியானது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி பூபதி மேற்பார்வையில் உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா, சுகாதார பிரிவு அதிகாரி பிச்சை, சுகாதார ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் நேற்று காலை திருப்பூர் பூ மார்க்கெட் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கடைகளில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்படி மொத்தம் 650 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 9 கடை உரிமையாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்