தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு தொடங்கியது : 1.94 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்
கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 1.94 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மருத்துவம் தவிர்த்து, பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) நேற்று தொடங்கியது. முதல் நாளில் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 94 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இவர்களின் வசதிக்காக மாநிலத்தில் 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை உயிரியல், மதியம் 2.30 மணியில் இருந்து 3.50 மணி வரை கணித தேர்வுகள் நடைபெற்றன. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை இயற்பியல், மாலை வேதியியல் தேர்வு நடக்கிறது.
நாளை (புதன் கிழமை) வெளிமாநிலங்கள் மற்றும் எல்லை பகுதிகளில் உள்ள மாணவர்களின் வசதிக்காக கன்னட மொழி பாட தேர்வு நடக்கிறது. கை கடிகாரம், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்டவை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.